நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம்
வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம்
கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம்
முடியும்
பயணம்!
கனவுகள் குறைய இளமையின் பயணம்
காதல்கள் மறைய முதுமையின் பயணம்
ஊர்மறந்தொழிய மரணத்தின் பயணம்
முடியும்
பயணம்!
வானினைச் சேர தீயின் பயணம்!
பூமியைச் சேர நீரின் பயணம்!
வெற்றிடம் தேடும் காற்றின் பயணம்!
எல்லைகள் தேடும் வானின் பயணம்!
பாதை போகும் போக்கில்
பாதம் போகும் பயணம்!
முதலோ முடிவோ அறியா
கனவின் கனவில் பயணம்!
நாளைக் காலை காண
ஆயுள் ஏந்திப் பயணம்!
விடியும் விடியும் என்றே
முடியும் முடியும் பயணம்!
கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும்
உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும்
தனையிழந்து வெளியினில் தேடும்
மனிதனின் நெடும் பயணம்!
முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம்
கடைசியில் நான்கு மடங்குகள் கூடும்
முடிவடைந்த புள்ளியில் மீண்டும்
தொடங்கிடும் ஒரு பயணம்!
_______________________________
No comments:
Post a Comment